எனது வீட்டுக்கும் புகையிரத நிலையத்துக்கும் இடையில் நான்கு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அதில் இரண்டாவது நிறுத்தத்தில் சவப்பெட்டி விற்பனை செய்யும் ஒரு வியாபார நிலையமும் இருக்கின்றது. அதன் வெளிப்பகுதியில் புதிதாக ஒரு விளம்பரம் ஒட்டப்பட்டிருப்பதை இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவதானித்தேன் (படத்தைப் பார்க்கவும்).
தமிழில் சொல்வதாக இருந்தால், 'மாதத்துக்கு 17 யூரோ 25 சதங்கள்செலுத்தி மரணித்த பின் (உங்கள்) இறுதி மரியாதையை உறுதி செய்து கொள்ளுங்கள்' என சொல்ல முடியும். ஐரோப்பாவின் வாழ்வியல் சிக்கலை ஒற்றை வரியில் உணர்த்தும் அற்புதமான வாசகம் இது.
"உயிர் பிரிந்த பின் அழுகும் உடலை வைத்து என்ன அழகா பார்ப்பார்கள்? ஒன்றில் இழுத்துப் போட்டு புதைப்பார்கள்! அல்லது எரியூட்டுவார்கள்" என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கும் பல ஆயிரங்களில் பணம் தேவைப் படுகிறதாம்....
அது மட்டுமல்ல, காற்றைப் பிடிப்பதைப் போல வேலையே கதியென ஓட வைக்கும் வாழ்வியல், உறவுகளை சிக்கலாக்கி அன்பு, பாசம் போன்ற உயரிய மனிதப் பண்புகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, வியாபாரம்... பணம் என்ற இரு எல்லைகளுக்குள் மனித வாழ்வை முடக்கியிருப்பது ஐரோப்பாவில் மட்டுமல்ல, இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.
காற்றாகப் பறந்து, நாட்டுக்காக தனது குடும்பத்துக்காக மாடாக உழைப்பவர்களை தினமும் காண்கிறோம். அவர்கள் முதிர்ந்து இயலாமை எனற கட்டத்துக்கு வரும் போது அவர்களிடம் எல்லா வசதிகளும் இருக்கும்.
மாதம் முடிய ஓய்வூதியம் கணக்கில் வந்து விழும். வீட்டு வேலைகளை செய்து கொடுக்க வேலையாட்கள் இருப்பார்கள். ஆனால், மனம் விட்டு பேசுவதற்கு, சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு உறவு கூட அருகில் இருக்காது. அவர்களும் தங்கள் பங்குக்கு வேலை என்ற சூறாவளிக்குள் சிக்கி சுழன்று கொண்டிருப்பார்கள்.
மன இறுக்கம் அதிகாமாகி, சந்தோசம் தொலைந்து, இயலாமை படுத்தியெடுக்க ஒரு கட்டத்தில் முதியோர் இல்லங்கள் ஐரோப்பிய பெருசகளின் தவிர்க்க முடியாத தரிப்பிடங்களாகிவிட்டன.
அண்மையில் முதியோர் இல்லமொன்றில் பணி புரியும் நண்பர் ஒருவர் சொன்னார். முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இரவு பகலாக, வெயிலிலும் பனியிலும் எல்லையில் காவல் நின்றவர், தனது வாழ்வின் பெரும் பகுதியை நாட்டுக்காக அர்பணித்துக் கொண்டவர் மரணித்து விட்டாராம். மரணித்து பல தினங்களாகிய பின்னரே அவரின் பொறுப்புதாரரனா மகன் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்து சேர்ந்தாராம்!
முதியோர் இல்லங்களிலும் மரண செய்தி மனைவிக்கு எட்டுமோ, மகனுக்கு எட்டுமோ, மகளுக்கு எட்டுமோ உரிய நேரத்தில் உரியது நடக்குமோ என்ற பதற்றத்தை நீக்கத்தான். எதை எதையோ முன் கூட்டியே திட்டமிடும் இவர்கள் இதையும் திட்டமிட பழக்கப் படுத்தப்படுகிறார்கள் போலும். அதன் விளைவுதான் 'உன் உடலை நீயே புதைத்துக்கொள்' என்ற முன்னெச்சரிக்கை விளம்பரங்கள்.
எங்கேயோ வாசித்த வரி ஒன்று நினைவுக்கு வருகிறது, "வேலையே கதியென கிடப்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை ருசிப்பதில்லை".
உலகமயமாக்கல், தாராளமயப்படுத்தல் தந்த பரிசு- வேலைக்கும் ஓய்வுக்கும் இடையில் நிகழ்ந்த சமநிலைத் தகர்ப்பு.
No comments:
Post a Comment