Wednesday, August 27, 2014

இலங்கை வரலாற்றின் ஜாஹிலிய்யா காலம் Puttalam Times


// இலங்கை வரலாற்றின் ஜாஹிலிய்யா காலம் \\
- பெண் பிறந்தால் கற்பாறையில் அடித்துக் கொன்றனர் -

பெண் குழந்தை பிறந்தால் வம்சத்திற்கு ஏற்படும் அவமானத்தில் இருந்து மீளுவதற்காக, அப் பெண் குழந்தையை உயிருடன் புதைக்கும் வழக்கமொன்றை, இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரேபியர்களிடம் இருந்ததையும், இஸ்லாம் அராபியாவின் ஆட்சியதிகாரத்தை ஏற்ற பின் (கி.பி. 6 ஆம் நூறாண்டின் ஆரம்பம்) பெண் சிசுக் கொலையைத் தடைசெய்ததையும் வரலாற்றில் படித்திருக்கின்றோம்.

நேற்று (2014.08.24) ஆம் திகதி, இலங்கையின் தென் மாகாண நகரமான பேருவலையில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையைக் கற்பாறையில் அடித்துக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பாக, Lanka True News எனும் சிங்கள இணையத்தளத்தில் வெளியான வரலாற்றுக் குறிப்பொன்று 19 ஆம் நூறாண்டுகளில் இலங்கையில் பெண் சிசுக் கொலை இருந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றது.

|| சிங்கள கட்டுரைப் பகுதியின் தமிழாக்கம்:

குடும்பமொன்றுக்கு (ஆண் குழந்தையல்லாமல்) பெண் குழந்தையொன்று பிறந்தால் அக் குழந்தையைக் கற்பாறையில் அடித்துக் கொலை செய்யும் வழக்கமொன்று பண்டைய சிங்கள பௌத்த சமூகத்தில் இருந்தது. பெண் இனம், இழி இனம், கல்லில் அடி, கொன்று போடு போன்ற பேச்சுவழக்குச் சொற்றொடர்கள் உருவானதும் இதன் அடிப்படையில் ஆகும்.

இம் மிலேச்சத்தனமான வழக்கத்தை முதன் முதலில் சட்டரீதியாகத் தடைசெய்தவர், **எஹெலபொல நிலமே (அடிக்குறிப்பை வாசிக்கவும்) ஆவார். தனது நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளை கற்பாறையில் அடித்துக் கொலை செய்வதைத் தடை செய்து வெளியிட்ட ஆணைச் சட்டத்தின் எழுத்தாவணம் இன்றும் உள்ளது. அவ்வாறு சட்டமியற்றிய எஹெலேபொல நிலமேயின் பெண் குழந்தைகள், அன்று வழக்கிலிருந்த அரச சட்டத்தின் அடிப்படையில் உரலில் போட்டு இடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இலங்கையை பிரித்தானியா ஆளுகைக்கு உட்பட்ட பின் சிங்கள பௌத்த மன்னர்களிடம் காணப்பட்ட மிலேச்சத்தனமான சட்டங்கள் முற்றாக வழக்கொழிக்கப்பட்டன. நீதிமன்ற முறை உருவானது. அனைத்து விதமான கொலைகாரர்களுக்கும் தராதரம் பாராமல் தண்டனை வழங்கப்பட்டது.
__________________________
** எஹெலேபொல நிலமே – இலங்கையின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் (1798 – 1815.02.18) அரசவை இராஜதந்திரிகளில் ஒருவராவார். சபரகமுவ மாகாணத்தின் ஆளுனராகக் கடமையாற்றினார். ஒரு முறை, மன்னனுக்கு அன்பளிப்பு செய்வதற்காக தங்கத்தினால் வாள், கிரீடம், வெள்ளிக் கட்டில் ஆகியவற்றைச் செய்வித்தார். இதனை அறிந்த மொல்லிகொட எனும் அதிகாரி, எஹெலேபொல நிலமே மன்னனாகும் எண்ணத்தில் இவற்றைச் செய்விப்பதாக கண்டி மன்னனுக்குக் கோள் மூட்டினான். இதனை உண்மையென நம்பிய மன்னன் எஹெலேபொல நிலமேயின் குடும்பத்தை போகம்பர மைதானத்தில் (இன்று சிரைச்சாலை அமைந்துள்ள இடம்) மிகக் கொடூரமாக கொலை செய்தான். எஹெலேபொலவின் இரண்டு புதல்வர்களைச் சிரச் சேதம் செய்து, பெண் குழந்தையை உரலில் போட்டு இடித்து, எஹெலேபொலவின் மனைவியை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்றான்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இறுதிக் காலப் பகுதியில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தான். தனக்கு நெருக்கமானவர்கள் கூறியதையெல்லாம் விசாரிக்காமல் நம்பினான். தனது ஆட்சிக்கு எதிராக சூழ்ச்சி நடப்பதாக சந்தேகத்துடன் வாழ்ந்தான். மதுவுக்கு அடிமையானான். ஈற்றில், 17 வருடம் கண்டி இராஜதானியை ஆண்ட மன்னனின் முடிக்கும் இலங்கையின் மன்னராட்சிக்கும் அதன் மக்கள், 1815.02.18 ஆம் திகதி முடிவு கட்டினர்.

1815.03.02 ஆம் திகதி கண்டி இராஜதானியின் அரச பிரதானிகளுக்கும் பிரித்தானியாவின் இலங்கை ஆளுனர் Sir Robert Brownrigg க்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட வரலாற்று ஆவணமான கண்டி ஒப்பந்தத்தில் எஹெலேபொல நிலமேயும் கையொப்பமிட்டார் (முதலாவதாக இருப்பது). எஹெலேபொலயும் இன்னும் இரண்டு அதிகாரிகளும் தமிழ் மொழியில் கையொப்பமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment