Wednesday, November 26, 2014

இப்படியும் சிலர் ..Thanks to புத்தளம் அழகிய நினைவுகள்

நண்பர் (Abdul wahid)ஒருவரின் முக நூல் பகிர்வு...

மஸ்கட்டில் நான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது...

கிட்டத்தட்ட அவங்களை ஏழு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.

அவங்க வேலை பார்த்த அந்த அரபி வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாகமும் இவங்க கையில்தான் இருந்தது, இவங்களும் ரொம்ப நேர்மையா கிட்ட தட்ட அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே இருந்தாங்க, அந்த அம்மாவுக்கு இரண்டு மகள்கள், ஆறு பேரன் பேத்திகள்... எல்லோரும் இலங்கையில்தான் இருக்காங்க.
தன்னோட இந்த முப்பது வருஷ வருமானம் அனைத்தையும் தன்னோட இரண்டு மகள்களுக்குதான் செலவு செய்தார்களே தவிர தனக்கென அஞ்சு பைசாகூட அவங்க வச்சிக்கிட்டது கிடையாது.

சரி...அறுபது வயசாயிடுச்சி, வேலை பார்த்தது போதும் இனிமே நம்ம மகள்கள் நம்மள கவனிச்சுப்பாங்கன்னு சொல்லி ரொம்ப நமபிக்கையோட, இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போயிட்டாங்க... ஆனா அவங்களை அனுப்ப அந்த அரபி குடும்பதுக்கு மனசே இல்லை, இருந்தாலும் நான் என்னோட கடைசி காலத்தை என் மகள்களோடும் பேரன் பேத்திகளோடும் கழிக்கணும்னு சொல்லி அந்த அரபி குடும்பத்தை ஒரு வழியா சமாதான படுத்திட்டு இலங்கைக்கு போனாங்க.

அவங்க ஊருக்கு போயி நாளே மாசம்தான் ஆகுது, அதுக்குள்ளே அவங்களோட ரெண்டு மகள்களுக்குள்ளும் சண்டை வந்து, அம்மா உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பார்க்க வேண்டும் என்று ஒரு மகளும், இல்லே உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கனும்னு இன்னொரு மகளும் மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டு கடைசிலே ரெண்டு பேருமே இவங்களை கவனிக்காம விட்டுட்டாங்க...
ஒருநாள் அரபி அவங்களுக்கு சும்மா நலம் விசாரிக்கிறதுக்காக போன் பண்ணியிருக்கார், அப்போ அவங்க மஞ்ச காமாலையும், டைபாயிடு காய்ச்சலும் வந்து, கவனிக்க யாருமே இல்லாம தன்னோட சொந்தகாரங்க வீட்ல படுத்த படுக்கையா இருந்திருக்காங்க. இதை கேள்விப்பட்ட அந்த அரபி உடனே வெளிநாட்ல படிச்சிட்டு இருந்த தன்னோட மகனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி உடனே போயி அவங்களை இங்கே கூட்டிட்டுவான்னு சொல்லிட்டாரு.

அந்த அரபியோட மகனும் உடனே லண்டனில் இருந்து கிளம்பி இலங்கைக்கி போயி அவங்களை கொண்டு வந்து கொழும்பில் உள்ள பெரிய மருத்தவமனையில் ஒரு வாரம் வைத்து சிகிச்சை அளித்து அவங்க ஓரளவு குணம் அடைந்தவுடன் மஸ்கட்டிற்கு கொண்டு வந்து, இங்கயும் ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து கிகிச்சை அளித்து பூரண குணமானவுடன் இப்போ அந்த அரபியோட வீட்லயே கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க.
இப்போ விசிட் விசாலதான் வந்திருக்காங்க, அறுபது வயசுக்கு மேலே இங்கே வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசா அடிக்க முடியாது... இருந்தாலும் தன்னுடைய தனி அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு விசா அடிப்பதாகவும், வேலை எதுவும் செய்ய வேண்டாம். இங்கு இருக்கும் மற்ற வேலையாட்களை வைத்து வீட்டை கவனிச்சிட்டு நீங்க சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்னு அந்த அரபியும், அரபியின் மனைவியும் சொல்லிட்டாங்களாம்.

இத எல்லாம் அவங்க சொல்லிமுடிக்கும்வரை, அவங்க கண்ணுல இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிஞ்சிட்டே இருந்துச்சு...
எங்க ஊர்ல ஆம்பள புள்ளைங்க பாக்காது பொம்பள புள்ளைங்கதான் பாக்கும்னு சொல்லுவாங்க உங்க விஷயத்துல வித்தியாசமா இருக்கு, எந்த புள்ளையும் ஒரு விஷயத்தை மறக்க கூடாது, நாம் நம் பெற்றோரை கவனிக்கவில்லை என்றால் நம் பிள்ளைகள் எப்படி நம்மை கவனிப்பார்கள்...... அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வரும்போது என் மனமும் கலங்கியே போனது
நமக்கு பணத்தை பார்த்து பார்த்து பாசம் மறந்துவிட்டதா……? இல்லை பணம் கண்ணையும், மனதையும் மறைத்துவிட்டதா…..?

நீ ஒருவர்மீது அதிக பாசம் வைக்க நினைத்தால் அதில் முதலிடம் உன் தாய்க்கு கொடு........
நீ ஒருவருக்கு மரியாதை செலுத்த நினைத்தால் அதில் முதலிடம் உன் தந்தைக்கு கொடு......
இறை தூதர் (ஸல்)அவர்கள் சொன்னார்கள் படைப்பினங்களின் மீது கருணை காட்டாதவர் (படைத்தவனால் கருணை காட்டப்படமாட்டார்)
நூல் – புஹாரி

அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)

"(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!"
(அல்குர்ஆன் 17: 23,24)

No comments:

Post a Comment