மகிந்தவா-மைத்ரியா!!! By Rasoolsha Sharoofi
இன்று சமூக வலைத் தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பு 'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மகிந்தவா? அல்லது மைத்ரியா? என்பதாகவே இருக்கின்றது.
இந்த வாதப் பிரதிவாதங்களை உற்று அவதானித்தபோது ஒன்று மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது, அனைவருமே தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி அல்லது தனிநபர் வெற்றி பெறவேண்டும் அதன்மூலம் அவர்தம் பதவிகள், அதிகாரங்கள் தக்கவைத்துக் கொள்ளப்படவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே யார் வந்தால் நல்லது என உரையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களின் வாழ்க்கை தரம் பற்றியோ, ஜனநாயக விழுமியங்கள் பற்றியோ, சர்வதேச அரங்கில் இலங்கையின் நிலை பற்றியோ அல்லது போருக்கு முன்- பின் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றியோ அலசுபவர்களாக இல்லை (தெளிவான புள்ளிவிவரங்களோடு பேசுபவர்கள் மிகவும் குறைவானவர்களே இருக்கின்றார்கள்).
காரணம், காலா காலமாக அரசியல் பற்றி இப்படியே பேசிப் பழகிவிட்டோம். நமது அரியல் தலைவர்களும் தொண்டர்கள் இப்படித் தான் இருக்கவேண்டும் என நினைத்தார்களோ என்னவோ. அவர்களும் 'வாசி பெத்தட்ட ஹொய்யா...' அதுதான் சாணக்கியம் என நினைத்து அங்கிருந்து இங்கே தாவுவதும் இங்கிருந்து அங்கே தாவுவதுமாக அரசியலில் பரிணாம வளர்சியடைந்திருக்கிறார்கள்.
இன்று கட்சி தாவிக் கொண்டிருக்கும் மேதாவிகளுக்கு, இந்தியாவின் மூத்த அரசியல் வாதியான அறிஞர் அண்ணாத்துறை அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. "பதவி என்பது தோளில் கிடைக்கும் துண்டைப் போன்றது. கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேஷ்டியைப் போன்றது" பதவியை உதறிவிட்டு போய்க் கொண்டேயிருக்கலாம், ஆனால் பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கமுடியாது இல்லையா?
உண்மையில், அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய எத்தனிக்கும் தனி ஒரு நபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ கொள்கை என்ற ஒன்று இருக்கும், இருக்க வேண்டும். அந்த கொள்கைக்காவே மக்களும் வாக்களிப்பார்கள்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதுமே இரு துருவங்களாக இருந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கட்டும் சுதந்திரக் கட்சியாக இருக்கட்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மக்கள் முன்னணியாக இருக்கட்டும் இன்னும் ஹெல உறுமைய சம சமாஜி கட்சி போன்ற சிறு கட்சிகளாக இருந்தாலும் சமூகப் பொருளாதார ரீதியாக வெவ்வேறு கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் கொண்டவையாகவே இருக்கின்றன.
இன்று இவர்கள் அனைவரும் இணைந்து காய் நகர்த்துவது மகிந்த ராஜபக்ஷ என்ற ஒரு காயை வீழ்த்துவதற்காக மட்டுமே என்பது தெளிவு. அதற்கு அப்பால் இவர்களால் இணைந்து ஒன்றாக பயணிக்க முடியாது என்ற உண்மையை மக்களாகிய நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது இத் தருணத்தில் மிக முக்கியமானது. (அனுர குமார திசானயகாவினால் ரணிலின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ரணிலுக்கு சந்திரிக்கா அம்மையாரைப் பிடிக்காது.. இப்படி பல பிடிக்காதுகள் உள்ளே இருக்கின்றன)
ராஜபக்க்ஷ அரசைப் பொறுத்தவரையும், விடுதலைப் புலிகளை துடைத்து எரிந்ததன் மூலம் இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்த அரசினாலும் எட்ட முடியாத இலக்கை தொட்ட அரசு என்ற பெயரை முதல் தவணையிலேயே அது பெற்றுக் கொண்டது.தொடர்ந்து, சர்வதேச அரங்கில் கிளம்பிய போர்க் குற்ற சர்ச்சைகளைக் கூட சமாளிக்கும் திறன் கொண்ட அரசாகவே அது பார்க்கப்பட்டது.
காரணம், அதன் ராஜதந்திர நகர்வுகள்... உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா பிரேரணையை கொண்டுவந்தால் அது ரஷ்யாவிடம் சென்றது. இந்தியாவை சமாளிக்க சீனா, பாகிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்தியது.
பாராளுமன்றத்துக்கு உள்ளே எதிர் கட்சிகள் பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காக ஆளும் கட்சியின் பக்கம் அத்தனை பேருக்கும்கதிரைகளை இழுத்துப் போடத் தொடங்கியது. இதுவும் ராஜ தந்திரம்தான்.
ஆனால், போரில் வென்றவர்களால் மக்கள் மனங்களை வெல்ல முடியாமல் போனதுதான் துரதிஷ்டம். அங்கே ஆரம்பமாகியது அதன் சருக்கல்.
சிறுபான்மை சமூகங்களை (தமிழ், முஸ்லிம் சமூகங்களை) இரண்டாம் தர குடிமக்களாக அது பார்க்கத் தொடங்கியது. அதன் ஒரு வடிவம்தான் பொது பல சேனாக்களின் எழுச்சி. பெரும் பான்மை சிங்கள் மக்கள் கூட இந்த எழுச்சியை வெறுப்புடன்தான் பார்த்தார்கள்.
மற்றும் பலஸ்தீனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மகிந்த ராஜபக்க்ஷ அதிகாரத்தில் இருக்கும்போதே பல தலைவர்களால் மறுக்கப்பட்ட இஸ்ரேல் தூதரகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது நகை முரண்.
இன்று நண்பர்களே எதிரியாகிவிட்ட நிலையில், எஞ்சியிருப்பவர்களும் மதில் மேல் கிடக்கும் பூனைகாளாக காட்சியளிக்கும் நிலையில், மகிந்த ராஜபக்க்ஷவின் நகர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதை மிகவும் ஆழமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சிறு பான்மை சமூகங்களைப் பொறுத்தவரையும் யாரை ஆதரிப்பது, யார் பக்கம் நிற்பது என்பது பற்றிய தெளிவான வழிகாட்டுதல் இத் தருணத்தில் மிக அவசியமானது. தமிழ் சமூகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி என்றஒரு கட்சி இருக்கிறது. அதை அவர்கள் நம்பலாம், ஆனால் முஸ்லிம்களுக்கு......????
Nice Analysis...!
ReplyDelete