Wednesday, November 26, 2014

மகிந்தவா-மைத்ரியா!!! Rasoolsha Sharoofi

மகிந்தவா-மைத்ரியா!!! By Rasoolsha Sharoofi

இன்று சமூக வலைத் தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பு 'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மகிந்தவா? அல்லது மைத்ரியா? என்பதாகவே இருக்கின்றது.

இந்த வாதப் பிரதிவாதங்களை உற்று அவதானித்தபோது ஒன்று மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது, அனைவருமே தாங்கள்  சார்ந்திருக்கும் கட்சி அல்லது தனிநபர் வெற்றி  பெறவேண்டும் அதன்மூலம் அவர்தம் பதவிகள், அதிகாரங்கள் தக்கவைத்துக் கொள்ளப்படவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே யார் வந்தால் நல்லது என உரையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களின் வாழ்க்கை தரம் பற்றியோ, ஜனநாயக விழுமியங்கள் பற்றியோ, சர்வதேச அரங்கில் இலங்கையின் நிலை பற்றியோ அல்லது போருக்கு முன்- பின் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றியோ அலசுபவர்களாக இல்லை (தெளிவான புள்ளிவிவரங்களோடு பேசுபவர்கள்  மிகவும் குறைவானவர்களே இருக்கின்றார்கள்).

காரணம், காலா காலமாக அரசியல் பற்றி இப்படியே பேசிப் பழகிவிட்டோம். நமது அரியல் தலைவர்களும் தொண்டர்கள் இப்படித் தான் இருக்கவேண்டும் என நினைத்தார்களோ என்னவோ. அவர்களும் 'வாசி பெத்தட்ட ஹொய்யா...'  அதுதான் சாணக்கியம் என நினைத்து அங்கிருந்து இங்கே தாவுவதும் இங்கிருந்து அங்கே தாவுவதுமாக அரசியலில் பரிணாம வளர்சியடைந்திருக்கிறார்கள்.

இன்று கட்சி  தாவிக் கொண்டிருக்கும் மேதாவிகளுக்கு, இந்தியாவின் மூத்த அரசியல் வாதியான  அறிஞர் அண்ணாத்துறை அவர்கள் சொன்னது  நினைவுக்கு வருகிறது. "பதவி என்பது தோளில் கிடைக்கும் துண்டைப் போன்றது. கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேஷ்டியைப் போன்றது" பதவியை உதறிவிட்டு போய்க் கொண்டேயிருக்கலாம், ஆனால் பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கமுடியாது இல்லையா?

உண்மையில், அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய எத்தனிக்கும் தனி ஒரு நபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ கொள்கை என்ற ஒன்று இருக்கும், இருக்க வேண்டும். அந்த கொள்கைக்காவே மக்களும் வாக்களிப்பார்கள்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதுமே இரு துருவங்களாக இருந்து வந்த ஐக்கிய தேசிய  கட்சியாக இருக்கட்டும் சுதந்திரக் கட்சியாக இருக்கட்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மக்கள் முன்னணியாக இருக்கட்டும் இன்னும் ஹெல உறுமைய சம சமாஜி கட்சி போன்ற சிறு கட்சிகளாக இருந்தாலும் சமூகப் பொருளாதார ரீதியாக வெவ்வேறு கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் கொண்டவையாகவே இருக்கின்றன.

இன்று இவர்கள் அனைவரும் இணைந்து காய் நகர்த்துவது மகிந்த ராஜபக்ஷ என்ற ஒரு காயை வீழ்த்துவதற்காக மட்டுமே என்பது தெளிவு. அதற்கு அப்பால்  இவர்களால்  இணைந்து ஒன்றாக பயணிக்க முடியாது என்ற உண்மையை மக்களாகிய நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது இத் தருணத்தில் மிக முக்கியமானது. (அனுர குமார திசானயகாவினால்  ரணிலின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ரணிலுக்கு சந்திரிக்கா அம்மையாரைப் பிடிக்காது.. இப்படி  பல பிடிக்காதுகள் உள்ளே இருக்கின்றன) 

ராஜபக்க்ஷ அரசைப் பொறுத்தவரையும், விடுதலைப் புலிகளை துடைத்து எரிந்ததன் மூலம்  இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்த அரசினாலும் எட்ட முடியாத இலக்கை தொட்ட அரசு என்ற பெயரை முதல் தவணையிலேயே அது பெற்றுக் கொண்டது.தொடர்ந்து, சர்வதேச அரங்கில்  கிளம்பிய போர்க் குற்ற சர்ச்சைகளைக் கூட சமாளிக்கும் திறன் கொண்ட அரசாகவே அது பார்க்கப்பட்டது.

காரணம், அதன் ராஜதந்திர நகர்வுகள்... உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா பிரேரணையை கொண்டுவந்தால் அது ரஷ்யாவிடம் சென்றது. இந்தியாவை சமாளிக்க சீனா, பாகிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்தியது.

பாராளுமன்றத்துக்கு  உள்ளே எதிர் கட்சிகள்  பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காக  ஆளும் கட்சியின் பக்கம்  அத்தனை பேருக்கும்கதிரைகளை இழுத்துப் போடத் தொடங்கியது. இதுவும் ராஜ தந்திரம்தான்.

ஆனால், போரில் வென்றவர்களால்  மக்கள் மனங்களை  வெல்ல முடியாமல் போனதுதான் துரதிஷ்டம். அங்கே  ஆரம்பமாகியது அதன் சருக்கல்.

சிறுபான்மை சமூகங்களை (தமிழ், முஸ்லிம் சமூகங்களை) இரண்டாம் தர குடிமக்களாக அது பார்க்கத் தொடங்கியது. அதன் ஒரு வடிவம்தான் பொது பல சேனாக்களின் எழுச்சி. பெரும் பான்மை சிங்கள் மக்கள் கூட இந்த எழுச்சியை வெறுப்புடன்தான் பார்த்தார்கள்.

மற்றும் பலஸ்தீனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மகிந்த ராஜபக்க்ஷ அதிகாரத்தில் இருக்கும்போதே  பல தலைவர்களால் மறுக்கப்பட்ட இஸ்ரேல் தூதரகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது நகை முரண்.

இன்று நண்பர்களே எதிரியாகிவிட்ட நிலையில், எஞ்சியிருப்பவர்களும் மதில் மேல் கிடக்கும் பூனைகாளாக காட்சியளிக்கும் நிலையில், மகிந்த ராஜபக்க்ஷவின் நகர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதை மிகவும் ஆழமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிறு பான்மை சமூகங்களைப் பொறுத்தவரையும் யாரை ஆதரிப்பது, யார் பக்கம் நிற்பது என்பது பற்றிய தெளிவான வழிகாட்டுதல் இத் தருணத்தில் மிக அவசியமானது. தமிழ் சமூகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி என்றஒரு கட்சி இருக்கிறது. அதை அவர்கள் நம்பலாம், ஆனால் முஸ்லிம்களுக்கு......????

இப்படியும் சிலர் ..Thanks to புத்தளம் அழகிய நினைவுகள்

நண்பர் (Abdul wahid)ஒருவரின் முக நூல் பகிர்வு...

மஸ்கட்டில் நான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது...

கிட்டத்தட்ட அவங்களை ஏழு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.

அவங்க வேலை பார்த்த அந்த அரபி வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாகமும் இவங்க கையில்தான் இருந்தது, இவங்களும் ரொம்ப நேர்மையா கிட்ட தட்ட அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே இருந்தாங்க, அந்த அம்மாவுக்கு இரண்டு மகள்கள், ஆறு பேரன் பேத்திகள்... எல்லோரும் இலங்கையில்தான் இருக்காங்க.
தன்னோட இந்த முப்பது வருஷ வருமானம் அனைத்தையும் தன்னோட இரண்டு மகள்களுக்குதான் செலவு செய்தார்களே தவிர தனக்கென அஞ்சு பைசாகூட அவங்க வச்சிக்கிட்டது கிடையாது.

சரி...அறுபது வயசாயிடுச்சி, வேலை பார்த்தது போதும் இனிமே நம்ம மகள்கள் நம்மள கவனிச்சுப்பாங்கன்னு சொல்லி ரொம்ப நமபிக்கையோட, இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போயிட்டாங்க... ஆனா அவங்களை அனுப்ப அந்த அரபி குடும்பதுக்கு மனசே இல்லை, இருந்தாலும் நான் என்னோட கடைசி காலத்தை என் மகள்களோடும் பேரன் பேத்திகளோடும் கழிக்கணும்னு சொல்லி அந்த அரபி குடும்பத்தை ஒரு வழியா சமாதான படுத்திட்டு இலங்கைக்கு போனாங்க.

அவங்க ஊருக்கு போயி நாளே மாசம்தான் ஆகுது, அதுக்குள்ளே அவங்களோட ரெண்டு மகள்களுக்குள்ளும் சண்டை வந்து, அம்மா உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பார்க்க வேண்டும் என்று ஒரு மகளும், இல்லே உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கனும்னு இன்னொரு மகளும் மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டு கடைசிலே ரெண்டு பேருமே இவங்களை கவனிக்காம விட்டுட்டாங்க...
ஒருநாள் அரபி அவங்களுக்கு சும்மா நலம் விசாரிக்கிறதுக்காக போன் பண்ணியிருக்கார், அப்போ அவங்க மஞ்ச காமாலையும், டைபாயிடு காய்ச்சலும் வந்து, கவனிக்க யாருமே இல்லாம தன்னோட சொந்தகாரங்க வீட்ல படுத்த படுக்கையா இருந்திருக்காங்க. இதை கேள்விப்பட்ட அந்த அரபி உடனே வெளிநாட்ல படிச்சிட்டு இருந்த தன்னோட மகனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி உடனே போயி அவங்களை இங்கே கூட்டிட்டுவான்னு சொல்லிட்டாரு.

அந்த அரபியோட மகனும் உடனே லண்டனில் இருந்து கிளம்பி இலங்கைக்கி போயி அவங்களை கொண்டு வந்து கொழும்பில் உள்ள பெரிய மருத்தவமனையில் ஒரு வாரம் வைத்து சிகிச்சை அளித்து அவங்க ஓரளவு குணம் அடைந்தவுடன் மஸ்கட்டிற்கு கொண்டு வந்து, இங்கயும் ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து கிகிச்சை அளித்து பூரண குணமானவுடன் இப்போ அந்த அரபியோட வீட்லயே கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க.
இப்போ விசிட் விசாலதான் வந்திருக்காங்க, அறுபது வயசுக்கு மேலே இங்கே வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசா அடிக்க முடியாது... இருந்தாலும் தன்னுடைய தனி அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு விசா அடிப்பதாகவும், வேலை எதுவும் செய்ய வேண்டாம். இங்கு இருக்கும் மற்ற வேலையாட்களை வைத்து வீட்டை கவனிச்சிட்டு நீங்க சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்னு அந்த அரபியும், அரபியின் மனைவியும் சொல்லிட்டாங்களாம்.

இத எல்லாம் அவங்க சொல்லிமுடிக்கும்வரை, அவங்க கண்ணுல இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிஞ்சிட்டே இருந்துச்சு...
எங்க ஊர்ல ஆம்பள புள்ளைங்க பாக்காது பொம்பள புள்ளைங்கதான் பாக்கும்னு சொல்லுவாங்க உங்க விஷயத்துல வித்தியாசமா இருக்கு, எந்த புள்ளையும் ஒரு விஷயத்தை மறக்க கூடாது, நாம் நம் பெற்றோரை கவனிக்கவில்லை என்றால் நம் பிள்ளைகள் எப்படி நம்மை கவனிப்பார்கள்...... அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வரும்போது என் மனமும் கலங்கியே போனது
நமக்கு பணத்தை பார்த்து பார்த்து பாசம் மறந்துவிட்டதா……? இல்லை பணம் கண்ணையும், மனதையும் மறைத்துவிட்டதா…..?

நீ ஒருவர்மீது அதிக பாசம் வைக்க நினைத்தால் அதில் முதலிடம் உன் தாய்க்கு கொடு........
நீ ஒருவருக்கு மரியாதை செலுத்த நினைத்தால் அதில் முதலிடம் உன் தந்தைக்கு கொடு......
இறை தூதர் (ஸல்)அவர்கள் சொன்னார்கள் படைப்பினங்களின் மீது கருணை காட்டாதவர் (படைத்தவனால் கருணை காட்டப்படமாட்டார்)
நூல் – புஹாரி

அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)

"(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!"
(அல்குர்ஆன் 17: 23,24)

Saturday, November 22, 2014

Satana- Political Discussion (22/11/2014) Sirasa TV. (Thanks to Siras TV)

Ven. Athuraliye Rathana Himi (JHU), Anura Kumara Dissanayake (JVP), Rajitha Senarathna (UNP) and Mythri pala Sirisena took part in this discussion.


http://videos.srilankanspuwath.co.uk/watch/70807-satana-22-11-2014

Monday, November 17, 2014

// பிரஜா உரிமை இழக்கும் இலங்கை மக்கள் \\ - வென்றெடுப்பதற்கு பொன்னான நேரம் கனிந்துள்ளது - Thanks to Puttalam Times.


// பிரஜா உரிமை இழக்கும் இலங்கை மக்கள் \\
- வென்றெடுப்பதற்கு பொன்னான நேரம் கனிந்துள்ளது -

ஜனாதிபதி தன் பதவி காலத்தை வகிக்க இன்னும் இரண்டு வருடங்கள் முழுமையாக மீதமுள்ளது. அவ்வாறிருக்கும்போது ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவசரமாக திட்டமிடுவது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டால் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகுவோர் அரசாங்கத்தின் அமைச்சர்களும் மந்திரிகளும் ஆவர்.

ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருக்கின்றனர். உண்மையில், இந்தக் கேள்விக்கு முன்னால் மனதுக்கு நேர்மையாகக் கூறக்கூடிய பதிலொன்று அவர்களிடம் இல்லை.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பதில்கள் வருகின்றன. அமைச்சர் அதாவுத செனவிரத்ன அன்மைய தினமொன்றில் கூறியதாவது, இராணுவத்தினரையும் அதிகாரிகளையும் அதனுடன் தொடர்பான அரசியல்வாதிகளையும் ஐரோப்பிய நாடொன்றுக்கு எடுத்து சென்று வழக்கு பேசவிருக்கும் முயற்சியைத் தோல்வியடையச் செய்வதற்காக அவசர ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது என்பதாகும். ஜனாதிபதி தேர்தலும் வெளிநாடொன்றில் பேசப்படும் வழக்கும் எவ்வாறு தொடர்புபடுகின்றது என்று அவர் கூறியதாக எந்தவொரு செய்தியும் இல்லை.

இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் முக்கியமான அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலை நியாயப்படுத்துவதற்காகக் கூறும் சில பிரபலமான கருத்துக்களும் உண்டு.
** ஏகாதிபத்திய அழுத்தத்தை நிறுத்துவது என்றும்...,
** இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதைத் தடுப்பதற்காக என்றும்...,
** பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது என்றும்...,
** கடல்கடந்த டயஸ்போரா நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் அழிவுகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது என்றும்...,
இன்னும் சில கருத்துக்களும் கூறப்பட்டாலும் இவை எதுவும் அவசர ஜனாதிபதி தேர்தலை நியாயப்படுத்தும் காரணங்கள் அல்ல என்பதும் தெளிவானது.

எனினும் அமைச்சர்களுக்கும் இதர அரசியல்வாதிகளுக்கும் இவ்வாறான பொய்களை அடிக்கடி கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாம் நினைப்பதை நேர்மையாக, பகிரங்கமாகக் கூற முடியாது என்பதே உண்மையான காரணம்.

அவசர ஜனாதிபதி தேர்தலுக்கான தேவையை மிக எளிமையாகக் கூறுவதாயின், ஜனாதிபதிக்கு அதிகாரத்தின் மீதுள்ள பேராசை ஆகும். பன்னிரெண்டு வருடங்கள் அதிகாரத்தில் வகிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும், அந்தளவு காலத்தினாலும் திருப்தியடையாத கடுமையான அதிகாரப் பேராசையொன்று அவருக்கு இருப்பது தற்போது மிக வெளிப்படையாகவே தெரிகின்றது.

இந்தப் பேராசை எந்தளவு கொடுமையானது என்றால், அதற்காக பாப்பாண்டவர் போன்ற சர்வதேசிய சமயத் தலைவரொவரின் இலங்கைக்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை கழுமரத்தில் ஏற்றக் கூட ஜனாதிபதி தயாராக இருக்கின்றார். நாட்டின் தேர்தல் சட்டம் உட்பட அனைத்து நல்லாட்சிக்கான அடிப்படைகளையும் பொருட்படுத்தாமல் நடந்துகொள்ளவும் அவர் தயாராகிவிட்டார். பெருந் தொகையான நாட்டு மக்களின் பணத்தை எதுவித பொறுப்புணர்வுமின்றி நினைத்தவாறு செலவு செய்துகொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவும் அவர் தயாராக இருக்கின்றார். மொத்த அரச இயந்திரத்தைத் தனது நிரலுக்கு ஏற்ப துஷ்பிரயோகம் செய்யவும் அவர் தயார். அதுமட்டுமல்ல, தனது பஞ்சாங்கத்துக்கு ஏற்ப நல்ல நாளொன்றில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நாட்டு மக்களின் வாழ்க்கை நேரசூசியை சின்னாபின்னப்படுத்தவும் அவர் தயாராகி விட்டார்.

ஒரு தனி மனிதன் தனது தேவைகளுக்காக தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்வதை, இயக்குவதை எவரும் குறைகூற மாட்டார்கள். ஆனால் தனி மனிதனொருவனின் தேவைக்காக முழு நாடும் அறிந்துகொண்டே சிக்கலுக்குள் இட்டுச்செல்வதாக இருந்தால் அதில் பெரும் தவறொன்று உள்ளது. அந்த தவறை ஆட்சியாளன் மட்டும் செய்யவில்லை, நாட்டு மக்களும் இந்தத் தவறுக்கு சரிக்கு சரிபாதி பொறுப்பாளர்களாகின்றனர்.

இவ்வாறு தனி மனித சர்வாதிகாரத்திற்கு நாட்டு மக்களை கைதியாக்க இடமளிப்பதாக இருந்தால், அந்த நாட்டில் இருப்பவர்களை ''பிரஜை'' என்று கருத முடியாது. அவ்வாறான ஒரு நாட்டில் மனிதர்கள், பிரஜைகள் அல்லாத பண்டங்கள் பொருட்கள்தான் இருக்க முடியும். ஆட்சியாளம் தான்தோன்றித்தனமாகும் அளவுக்கு பிரஜைகள் பண்டங்களின் பொருட்களின் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஆகவே, தம்முடைய இழந்துபோன பிரஜா உரிமையை வென்றெடுக்கும் தேவையொன்று இலங்கை பிரஜைகளிடம் உடனடியாக வளர்க்கப்பட வேண்டும். அதனை சர்வாதிகாரத்திற்கும் பிடிவாத ஆட்சிக்கும் எதிர்த்து நிற்பதினால் மட்டும் சாத்தியமாக்க முடியும். இதற்கு எதிராக எல்லா முனைகளில் இருந்தும் போராட வேண்டும். அதற்கான பொன்னான நேரம் தற்போது பிறந்துள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் மீண்டும் பிரஜைகளாக எழுந்து நிற்பதில் மக்கள் வெற்றிபெறுவார்கள் என்றால் இந் நாடு விழுந்துகொண்டிருக்கும் படு குழியில் இருந்து பாதுகாப்பது கஷ்டமான காரியமல்ல.

'ராவய' (16 நவம். 2014) கே.டப். ஜனரஞ்சன